இந்தியா
நடன கலைஞர் மான்சியா, அமைச்சர் கே ராதாகிருஷ்ணன்

முஸ்லிம் நடன கலைஞரின் நாட்டிய நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டும்- கோவில் அதிகாரிகளுக்கு கேரள அரசு வலியுறுத்தல்

Published On 2022-04-01 20:10 GMT   |   Update On 2022-04-01 20:10 GMT
கலைக்கு மதம் கிடையாது என்றும், நடனக் கலைஞர் மான்சியா நிகழ்ச்சியை நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூடல்மாணிக்கியம் கோவில் தேவஸ்தான அதிகாரிகளை கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது
திருச்சூர்:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கூடல்மாணிக்கியம் கோவிலில்
ஏப்ரல் 15 முதல் 25 வரை நடைபெறவிருக்கும் நடன விழாவில் பங்கேற்க பாரத நாட்டிய கலைஞரான மான்சியா, திட்டமிட்டிருந்தார். முஸ்லிம் பெண்ணான மான்சியாவின் கணவர் இந்து மதத்தை சேர்ந்தவர். 

மான்சியாவின் நடன நிகழ்ச்சியை கோவில் தேவஸ்தானம் முதலில் உறுதிப் படுத்தியிருந்தது. இது தொடர்பான நிகழ்ச்சி நிரலிலும் அவரது பெயர் இடம்பெற்றது. 

எனினும் சில நாட்களுக்குப் பிறகு, தேவஸ்தான அதிகாரிகள் மான்சியாவிடம் இந்து என்பதை உறுதிப்படுத்தச் சொன்னதாகவும் , அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், தமக்கு மதம் இல்லை என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதையடுத்து மான்சியாவின் நடன நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டது. கோவில் மரபுகள் மற்றும் சடங்குகள் இந்து அல்லாத நடனக் கலைஞர் பங்கேற்பதை அனுமதிக்காது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஒரு பரதநாட்டிய கலைஞரின் மதத்தைக் காரணம் காட்டி அவரது நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் தடை விதித்ததால், பல நடனக் கலைஞர்கள் கோவில் விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்தனர். 

இதனையடுத்து இந்த பிரச்சினையில் கேரள அரசு தலையிட்டுள்ளது. கூடல்மாணிக்கியம் கோவில் அதிகாரிகளிடம் பேசிய கேரள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், கோவில் மேடையில் மான்சியா நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இது பொதுமக்களின் விருப்பம் என்றும், மான்சியாவுக்கு இந்து அமைப்புகள் மற்றும் பாஜக தலைவர்கள் கூட ஆதரவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கேரள தந்திரிகளின் கடும் எதிர்ப்புதான் கோவில் நிர்வாகம் அவரது நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கலைக்கு மதம் இல்லை என்பதை தந்திரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று
அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளதாகவும் கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.


Tags:    

Similar News