இந்தியா
சோனியாகாந்தி, ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி

காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி சந்திப்பு

Published On 2022-03-22 21:44 GMT   |   Update On 2022-03-22 21:44 GMT
காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் பத்ம பூஷன் விருதை பெற்ற பிறகு அவருக்கு தொலை பேசியில் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் தலைமைக்கு எதிராக குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, முகுல் வாஸ்னி, ஜிதின் பிரசாதா ஆனந்த் சர்மா, பி.ஜே.குரியன், ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட 23 தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

கட்சிக்கு முழு நேர தலைவர் நியமிக்கப்பட வேண்டும், கட்சியில் 
சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து அவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். 

இந்நிலையில், ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து, அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தித்து பேசினார்.  

இதன் தொடர்ச்சியாக குலாம் நபி ஆசாத் பத்ம பூஷன் விருதை பெற்ற பிறகு அவருக்கு தொலைபேசியில் சோனியாகாந்தி  வாழ்த்து தெரிவித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், 23 அதிருப்தி தலைவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி மற்றும் விவேக் தங்கா ஆகியோருடன் நேற்று சோனியாகாந்தி பேசியுள்ளார். 

அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் விதமாக டெல்லியில் உள்ள சோனியாகாந்தி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களை சார்ந்திருக்க வேண்டாம் என்று சோனியா காந்தியை மூன்றுபேரும் கேட்டுக் கொண்டதாக  கூறப்படுகிறது. 

மேலும் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள கட்சி செயல்படும் விதத்தில் மாற்றம் தேவை என்று அதிருப்தி தலைவர்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சோனியாகாந்தி ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிருப்தி குழுவில் இடம் பெற்றுள்ள பிற தலைவர்களையும் வரும் நாட்களில் சோனியா காந்தி சந்திப்பார் என தெரிகிறது.


Tags:    

Similar News