இந்தியா
புஷ்கர்சிங் தாமி , பாஜக கொடி

நாளை உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு

Published On 2022-03-19 23:27 GMT   |   Update On 2022-03-19 23:27 GMT
முதலமைச்சர் தேர்வு பட்டியலில் சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த புஷ்கர்சிங் தாமி பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டேராடூன்:

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 47 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 

எனினும் காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி,  தோல்வி அடைந்தார்.  இதனால் அந்த மாநில புதிய முதலமைச்சர் குறித்து குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் டேராடூனில் நாளை (திங்கட்கிழமை) உத்தரகாண்ட் பா.ஜ.க. புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.  இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பார்வையாளர்கள் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங்,  மீனாட்சி லேகியும் பங்கேற்று புதிய முதலமைச்சர் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதன் பின்னர் இந்த கூட்டத்தில் உத்தரகாண்ட் சட்டசபை பா.ஜ.க. தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இதனிடையே, உத்தரகாண்ட் புதிய முதலமைச்சர் தேர்வு பட்டியலில் தோல்வியடைந்த புஷ்கர்சிங் தாமி பெயர் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்பால் மகாராஜ், தன்சிங் ராவத், அனில் பலூனி உள்ளிட்டோர் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் புஷ்கர்சிங்தாமிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படலாம் என மாநில பா.ஜ.க. தகவல்கள் தெரிவித்துள்ளது. 

அவர் தேர்வு செய்யப்பட்டால், இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் வகையில், தங்கள் தொகுதியை வழங்க, பாஜக எம்.எல்.ஏ.க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா வரும் செவ்வாய்கிழமை நடைபெறும் என்றும், அதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags:    

Similar News