இந்தியா
சோனியா காந்தி

தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகுகிறார்?

Update: 2022-03-19 04:57 GMT
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா குடும்பத்தினர் இல்லாமல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரை தேர்வு செய்ய ஆலோசிக்கப்படுகிறது.
புதுடெல்லி:

அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து மிக மோசமான படுதோல்விகளை சந்திப்பதால் கட்சியின் உள் கட்டமைப்பில் மிக பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.

குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 தலைவர்கள் ஒன்று சேர்ந்து சோனியா, ராகுலுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டதால் சோனியா, ராகுல். பிரியங்காவுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை விசுவாசிகளாக இருந்தவர்கள் கூட எதிர்ப்பு கூட்டணியில் கைகோர்த்து இருப்பதால் சோனியா கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

இதனால் எதிர்ப்பு தலைவர்களை சமரசம் செய்யும் வகையில் சோனியாவும், ராகுலும் பணிந்துள்ளனர். அவர்கள் இருவரும் எதிர்ப்பாளர்களை சந்தித்து பேசி வருகிறார்கள். குலாம்நபி ஆசாத் நேற்று சோனியாவை சந்தித்து பேசினார்.

அப்போது காங்கிரல் உள்கட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை தயார்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை சோனியா ஏற்றுக்கொண்டார்.

எனவே காங்கிரஸ் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஓரிரு மாதங்களில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் மூலம் முக்கிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதுவரை காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க சோனியா சம்மதித்துள்ளார்.

நிர்வாகிகள் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் பொறுப்புகளில் இருந்து சோனியா விலகுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரது விசுவாசிகளில் பெரும்பாலானவர்கள் இந்த திட்டத்தை ஏற்கவில்லை. சோனியா, ராகுல் தலைமை நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரசில் புதிய மாற்று திட்டம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி பதவியை ராகுல் ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா குடும்பத்தினர் இல்லாமல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரை தேர்வு செய்ய ஆலோசிக்கப்படுகிறது. அனுபவமிக்க அந்த புதிய நபர் மூலம் கட்சியை வழிநடத்தி செல்லவும் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.

எனவே காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் வர வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News