இந்தியா
சஞ்சய் ராவத்

மகா விகாஸ் அகாடி கூட்டணி அடுத்த தேர்தலிலும் ஆட்சியை தக்க வைக்கும்: சஞ்சய் ராவத்

Update: 2022-03-19 03:03 GMT
முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், அண்டை மாநிலமான கோவாவை போலவே மகாராஷ்டிராவிலும் பா.ஜனதா தனித்து ஆட்சிக்கு வரும் என கூறியிருந்தார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாடி அரசுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜனதா தலைவர்களுக்கும் இடையே கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது.

இந்தநிலையில் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், அண்டை மாநிலமான கோவாவை போலவே மகாராஷ்டிராவிலும் பா.ஜனதா தனித்து ஆட்சிக்கு வரும் என கூறியிருந்தார்.

இந்தநிலையில் அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று கூறியதாவது:-

சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு 2½ ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளது. மீதமுள்ள 2½ ஆண்டு ஆட்சி காலத்தையும் இந்த அரசு நிறைவு செய்யும். 2024-ம் ஆண்டு மீண்டும் நடைபெறும் தேர்தலிலும் நாங்கள் ஆட்சியை தக்கவைத்து கொள்வோம்.

தேவேந்திர பட்னாவிஸ் கோவா மாநிலத்தில் பா.ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டதால், அவர் இத்தகைய கணிப்பை முன்வைத்துள்ளார்.

ஆனால் கோவா என்றால் என்ன என்பதை தேவேந்திர பட்னாவிஸ் விரைவில் தெரிந்துகொள்வார். போர்த்துகீசியர்களாலும், ஆங்கிலேயர்களாலும் கூட கோவாவை புரிந்துகொள்ள முடிவியல்லை. பல அரசியல் கட்சிகளும் இதை புரிந்துகொள்ளவில்லை.

மகாராஷ்டிராவில் அரசியலின் அடையாளமான கலாசாரத்தையும், நகைச்சுவையையும் பா.ஜனதா அழித்துவிட்டது. இப்போது பேசுவதற்கு மக்கள் பயப்படுகிறார்கள். இதற்கு முன்பு மகாராஷ்டிராவில் இதுபோன்ற நிலை இல்லை. துரதிருஷ்டவசமாக பா.ஜனதாவில் உள்ள எங்கள் நண்பர்கள் இதை செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News