இந்தியா
சஞ்சய் ராவத், சந்திரசேகர ராவ்

காங்கிரஸ் இல்லாமல் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமையாது - சிவசேனா கருத்து

Published On 2022-02-21 06:49 GMT   |   Update On 2022-02-21 06:49 GMT
எதிர்க்கட்சிகள் கூட்டணியை வழி நடத்தும் திறன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு உள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் நிறுவனரும், தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். 

இந்த நடவடிக்கையில், அவருடன் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் இணைந்து பணியாற்றி வருகிறார்.

நேற்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். பாஜக-விற்கு எதிரான கூட்டணி குறித்து அவர் பேசியதாக தெரிகிறது. 

இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என்றும், எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஹைதராபாத் அல்லது வேறு ஏதேனும் ஒரு நகரத்தில் சந்திக்கலாம் என்று சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாமல் அரசியல் கூட்டணி இல்லை என்று சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மும்பையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

காங்கிரஸ் இல்லாமல் அரசியல் கூட்டணி உருவாகும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. மம்தா பானர்ஜி ஒரு அரசியல் முன்னணியை பரிந்துரைத்த நேரத்தில், காங்கிரஸை அழைப்பது குறித்து பேசிய முதல் அரசியல் கட்சி சிவசேனா. 

அனைவரையும் அழைத்துச் சென்று வழிநடத்தும் திறன் சந்திரசேகர ராவ்விற்கு உள்ளது என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News