இந்தியா
மீட்கப்பட்ட ஆட்டுக்குட்டியுடன் சிறுமி.

ஆட்டு குட்டியை மீட்க 25 அடி ஆழ கிணற்றுக்குள் குதித்த 7-ம் வகுப்பு மாணவி

Published On 2022-01-29 04:46 GMT   |   Update On 2022-01-29 04:46 GMT
ஆட்டுக்குட்டி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடுவதை கண்ட சிறுமி, கிணற்றின் கரையில் கிடந்த கயிற்றை இடுப்பில் கட்டி, அதன் மறுமுனையை அருகில் உள்ள மரத்தில் கட்டி யாருடைய துணையும் இன்றி கிணற்றுக்குள் குதித்துவிட்டார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த குருபந்தரா பகுதியை சேர்ந்தவர் ஷைனி. இவரது மகள் அல்போன்சா. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார்கள். இதில் பிறந்து 2 மாதமே ஆன ஆட்டுக்குட்டி ஒன்றும் உள்ளது.

இந்த ஆட்டுக்குட்டியை அல்போன்சா பிரியமுடன் வளர்த்து வந்தார். எப்போதும் ஆட்டுக்குட்டியை கையில் தூக்கியபடியே இருப்பார்.

ஷைனியின் வீடு அருகே ஒரு கிணறு உள்ளது. நேற்று மாலை இந்த கிணற்றின் சுவர் மீது ஆட்டுக்குட்டி ஏறியது. அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

இதைகண்ட ஷைனி சத்தம் போட்டார். அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவரது மகள் அல்போன்சாவும் அங்கு வந்தார். அவர் ஆட்டுக்குட்டி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடுவதை கண்டார்.

உடனே அவர் கிணற்றின் கரையில் கிடந்த கயிற்றை இடுப்பில் கட்டி, அதன்மறுமுனையை அருகில் உள்ள மரத்தில் கட்டினார். பின்னர் யாருடைய துணையும் இன்றி கிணற்றுக்குள் குதித்துவிட்டார்.

அங்கு தண்ணீரில் தத்தளித்த ஆட்டுக்குட்டியை மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்தார். சிறுமியின் துணிச்சலையும், அவரது சமயோகித புத்தியையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை மீட்க கிணற்றில் குதித்த சிறுமியின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Tags:    

Similar News