இந்தியா
குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத்துக்கு பத்மபூஷண் விருது: காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு நீடிப்பு

Published On 2022-01-28 03:13 GMT   |   Update On 2022-01-28 03:13 GMT
பத்மபூஷண் விருதை ஆசாத் ஏற்கக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதைப்போல கபில் சிபல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் விருது பெறுவதை வரவேற்று உள்ளனர்.
புதுடெல்லி :

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியுமான குலாம் நபி ஆசாத்துக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்து உள்ளது. இது காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விருதை ஆசாத் ஏற்கக்கூடாது என கட்சியின் ஒரு பிரிவினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெய்ராம் ரமேஷ், மேற்கு வங்க முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ பட்டாச்சார்யாவின் புறக்கணிப்பை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் இந்த விருதை புறக்கணிக்க வேண்டும் என ஆசாத்தை கேட்டுக்கொண்டு உள்ளார்.

தகுதியின் அடிப்படையில் மத்திய அரசு விருது வழங்கவில்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அதேநேரம் மற்றொரு மூத்த தலைவரான கரண் சிங், இந்த விருதை ஆசாத் ஏற்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். சக தலைவர் ஒருவர் கவுரவிக்கப்படும்போது, மற்றவர்கள் அதை ஆதரித்து அவரை வாழ்த்த வேண்டும் என கூறியுள்ளார்.

இதைப்போல கபில் சிபல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் விருது பெறுவதை வரவேற்று உள்ளனர்.
Tags:    

Similar News