இந்தியா
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 2,86,384 பேருக்கு தொற்று

Update: 2022-01-27 03:55 GMT
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 573 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் தொற்றில் இருந்து 3,06,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா புதிய பாதிப்புகளை விட, தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அந்த வகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,86,384 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 3,06,357 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 3 லட்சத்து 71 ஆயிரத்து 500 ஆக உயர்ந்தது. அதே நேரம் இதுவரை 3 கோடியே 76 லட்சத்து 77 ஆயிரத்து 328 பேர் தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர்.

அதே நேரத்தில் தினசரி பாதிப்பு விகிதம் 16.16-ல் இருந்து 19.59 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே போல வாராந்திர பாதிப்பு விகிதமும் 17.33-ல் இருந்து 17.75 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 49,771 பேருக்கும், கர்நாடகாவில் 48,905 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

மகாராஷ்டிராவில் 35,756, தமிழ்நாட்டில் 29,976, குஜராத்தில் 14,781, ஆந்திராவில் 13,618, ராஜஸ்தானில் 13,049 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் மேலும் 573 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 140 பேர் அடங்குவர்.

இதுதவிர மகாராஷ்டிராவில் 79, கர்நாடகாவில் 39, தமிழ்நாட்டில் 47, மேற்கு வங்கத்தில் 34, பஞ்சாபில் 22, டெல்லியில் 29 பேர், குஜராத், ராஜஸ்தான், அசாமில் தலா 21 பேர் நேற்று இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 4,91,700 ஆக உயர்ந்தது.

தற்போதைய நிலவரப்படி 22,02,472 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினத்தை விட 20,546 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 22,35,267 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 163 கோடியே 84 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று 14,62,261 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 72.21 கோடியாக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News