இந்தியா
குலாம்நபி ஆசாத்

குலாம்நபி ஆசாத்துக்கு பத்மபூஷண் விருதா?: காங்கிரசில் சலசலப்பு

Published On 2022-01-27 01:57 GMT   |   Update On 2022-01-27 01:57 GMT
கபில் சிபல், ஆனந்த் சர்மா, சசி தரூர், மணீஷ் திவாரி ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத்துக்கு பத்மபூஷண் விருது தருவதை வரவேற்றுள்ளனர்.
புது டெல்லி :

குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான குலாம்நபி ஆசாத்துக்கும் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசில் சோனியா காந்தியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி கடிதம் எழுதிய 23 தலைவர்களில் குலாம்நபி ஆசாத்தும் ஒருவர் என்பதால் அவருக்கு பத்மபூஷண் அறிவிக்கப்பட்டிருப்பது அந்த கட்சியின் தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் பத்மபூஷண் விருதை ஏற்றுக்கொண்டிருப்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ சரியான காரியத்தை அவர் (புத்ததேவ்) செய்துள்ளார். விடுதலை விரும்பி (ஆசாத்). மற்றவரை போல் அடிமையல்ல (குலாம்)” என்று பதிவிட்டார். இந்தியில் குலாம் என்றால் அடிமை, ஆசாத் என்றால் விடுதலை என்று பொருள். குலாம்நபி ஆசாத்தின் பெயரை வைத்தே ஜெய்ராம் ரமேஷ் வார்த்தைகளில் விளையாடி புத்ததேவை பாராட்டவும், குலாம்நபியை விமர்சிக்கவும் செய்தார்.

அதே நேரத்தில் கபில் சிபல், ஆனந்த் சர்மா, சசி தரூர், மணீஷ் திவாரி ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத்துக்கு பத்மபூஷண் விருது தருவதை வரவேற்றுள்ளனர்.

கபில் சிபல் தனது டுவிட்டர் பதிவில், “குலாம்நபி ஆசாத்துக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள். பொதுவாழ்வில் அவரது பங்களிப்பை நாடு அங்கீகரிக்கிறபோது, காங்கிரஸ் கட்சிக்கு அவரது சேவை தேவையில்லை என்பது முரணானது” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News