இந்தியா
கோவிஷீல்டு, கோவேக்சின்

சந்தை அனுமதியை பெற்ற பிறகு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி விலை குறையும்

Update: 2022-01-27 01:41 GMT
கொரோனா தடுப்பூசிகளுக்கு சந்தை விலையை மலிவாக நிர்ணயிக்கும் பணியைத் தொடங்குமாறு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதுடெல்லி :

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக புனே சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு, ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வினியோகிக்கும் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது.

இவ்விரு தடுப்பூசிகளும் தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இவ்விரு தடுப்பூசிகளுக்கு, அவற்றின் உற்பத்தி நிறுவனங்கள் சந்தை அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளன.

இவற்றை பரிசீலித்த பின்னர் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு, இந்த தடுப்பூசிகளை கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்துள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகளில் மட்டுமே கிடைக்கச்செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சந்தை அனுமதி தரலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இதன்மீது இன்னும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் முடிவு எடுக்கவில்லை. இந்த முடிவு விரைவில் வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போது கோவேக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.1200, கோவிஷீல்டு ஒரு டோஸ் விலை ரூ.780. தனியார் ஆஸ்பத்திரிகளில் 150 ரூபாய் சேவை கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. சேர்த்து இந்த விலைக்கு பொதுமக்களுக்கு கிடைக்கிறது.

ஆனால் இந்த தடுப்பூசிகளுக்கு சந்தை அனுமதி வழங்கிய உடன் இவற்றின் விலை குறையும் என தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசிகளுக்கு சந்தை விலையை மலிவாக நிர்ணயிக்கும் பணியைத் தொடங்குமாறு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் விலை ஒரு டோஸ் ரூ.275 என்ற அளவில் நிர்ணயிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலையுடன் ரூ.150 சேவை கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News