இந்தியா
விவசாயி கெம்பேகவுடா

பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இல்ல... கார் வாங்க வந்துட்டான்: அசிங்கப்படுத்திய சேல்ஸ்மேனுக்கு விவசாயி பதிலடி

Published On 2022-01-24 16:34 GMT   |   Update On 2022-01-24 16:34 GMT
கர்நாடக மாநிலத்தில் தோற்றத்தைப் பார்த்து ஏளனமாக பேசிய சேல்ஸ்மேனுக்கு, விவசாயி ஒரு மணி நேரத்தில் பதிலடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துமகுரு:

கர்நாடக மாநிலம் துமகுரு நகரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் பொலிரோ பிக்-அப் டிரக் வாங்குவதற்காக விவசாயி கெம்பேகவுடா சென்றுள்ளார். ஆனால் அவரது தோற்றத்தைப் பார்த்து குறைத்து மதிப்பிட்ட விற்பனையாளர் (சேல்ஸ்மேன்), அவரை மிகவும் ஏளனமாக பேசி உள்ளார். காரின் விலை என்ன? என்று விவசாயி கேட்டதற்கு, உன் பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இல்லை, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்க வந்துட்டியா? என்று விற்பனையாளர் தரக்குறைவாக பேசி வெளியே போகும்படி கூறி உள்ளார். 

இதனால் கடும் ஆத்திரமடைந்த விவசாயி, வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ‘என்னையே அசிங்கப்படுத்திட்டியா? ஒரு மணி நேரத்திற்குள் பணத்தைக் கொண்டுவந்தால் இன்றைக்கே காரை டெலிவரி செய்ய தயாரா? இதோ வாரேன்’என சவால் விட்ட கெம்பேகவுடா, அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சொன்னபடி ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாய் பணத்துடன் திரும்பி வந்து விற்பனையாளருக்கு அதிர்ச்சி கொடுத்ததுடன், இன்றைக்கே எனக்கு கார் வேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் அந்த காரை முன்பதிவு செய்து குறைந்தது நான்கு நாட்களாவது காத்திருக்க வேண்டும் என்பதால் விற்பனையாளரால் பதில் பேச முடியவில்லை. எனவே, விவசாயி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் விற்பனையாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பின்னர் போலீசார் வந்து தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். கடைசியாக விற்பனையாளர் மன்னிப்பு கேட்டார். ஆனால், ‘இவ்வளவு நடந்த பிறகும் உன் ஷோரூமில் நான் கார் வாங்க விரும்பவில்லை’ என்று கூறிய விவசாயி கெம்பேகவுடா, தனது 10 லட்சம் ரூபாய் பணத்துடன் திரும்பிச் சென்றார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் இதை ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்துள்ளனர். 
Tags:    

Similar News