இந்தியா
சோதனை சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள்

கேரள-கர்நாடகா எல்லையில் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கேட்டதால் சாலை மறியல் செய்த லாரி டிரைவர்கள்

Published On 2022-01-24 06:46 GMT   |   Update On 2022-01-24 06:46 GMT
லாரி டிரைவர்கள் அனைவரும் 2 வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் எல்லையில் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

அதன்படி கேரளாவில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து சரக்கு லாரிகளும் சுல்தான் பத்தேரி, மூலக்கல்லா சோதனை சாவடியில் பரிசோதனை செய்யப்படுகிறது.

அங்கு லாரி டிரைவர்கள் அனைவரும் 2 வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி நேற்று மாலை கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு இந்த வழியாக சென்ற லாரிகளை சோதனை சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தி கொரோனா நெகடிவ் சான்றிதழ் கேட்டனர். அதுவும் 24 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் நுழைய முடியும் எனவும் கூறினர்.

இதற்கு லாரி டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழுடன் வந்த லாரிகளை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கேரள - கர்நாடகா மாநில எல்லையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அங்கு உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முன்பு இருந்தது போல 15 நாட்களுக்குள் எடுத்த சான்றிதழுடன் வரும் சரக்கு லாரிகளை அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து டிரைவர்கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

Tags:    

Similar News