இந்தியா
திருட்டு போன பூனை

பெங்களூருவில் பூனை திருடு போனதாக போலீசில் புகார் அளித்த தொழில் அதிபர்

Published On 2022-01-24 03:25 GMT   |   Update On 2022-01-24 03:25 GMT
பெங்களூருவில் தான் செல்லமாக வளர்த்த பூனையை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டதாக போலீசில் தொழில் அதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.35 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு ஜெயநகர் ராஜண்ணா லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் மிஸ்பா சரீப். தொழில் அதிபரான இவர் தனது வீட்டில் ஒரு பூனையை செல்லமாக வளர்த்து வந்தார். அந்த பூனை ‘ஒயிட் பெர்சியன்’ வகையை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. அந்த பூனையை அதிக விலை கொடுத்து மிஸ்பா செரீப் வாங்கி வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி அன்று இரவு மிஸ்பா செரீப்பும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவில் வீட்டின் மாடி வழியாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், மிஸ்பா செரீப் வளர்த்து வந்த பூனையை திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மிஸ்பா செரீப் இதுபற்றி திலக் நகர் போலீசில் புகார் செய்தார்.

மேலும் தான் ஆசையாக அந்த பூனையை வளர்த்து வந்ததாகவும், அதை யாரோ திருடிச் சென்று விட்டதாகவும், அதை உடனடியாக கண்டுபிடித்து தருமாறும் கோரியிருந்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பூனையையும், அதை திருடிய மர்ம நபரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் அந்த பூனையின் புகைப்படம் அச்சிடப்பட்ட போஸ்டர்களை மிஸ்பா செரீப் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி வருகிறார்.

மேலும் பாதசாரிகளிடமும் பூனை காணாமல் போனது தொடர்பாக நோட்டீஸ்களை அச்சிட்டு விநியோகித்து வருகிறார். அதில் அந்த பூனையை பற்றிய விவரங்களையும், அதை கண்டுபிடித்து தந்தால் ரூ.35 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் மிஸ்பா செரீப் குறிப்பிட்டு உள்ளார். இந்த வினோத சம்பவம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
Tags:    

Similar News