இந்தியா
சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி

விடுதலை பெறவேண்டும் என்ற நம்பிக்கையை புகுத்தியவர் நேதாஜி - பிரதமர் மோடி பேச்சு

Published On 2022-01-23 14:15 GMT   |   Update On 2022-01-23 14:15 GMT
இந்திய தாய்நாட்டை சுதந்திரத்திற்காக போர்க்களமாக மாற்றியவர் நேதாஜி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாளையொட்டி டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவரது மின் ஒளியிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த சிலை 28 அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்டது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

நேதாஜி பிறந்தநாளை வீரத்திருநாளாக கொண்டாட முடிவு செய்தோம். அதன்படி நேதாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

விடுதலை பெறவேண்டும் என்ற நம்பிக்கையை புகுத்தியவர் நேதாஜி. இந்திய தாய்நாட்டை சுதந்திரத்திற்காக போர்க்களமாக மாற்றியவர் நேதாஜி. 

கடுமையான சோதனைகளை சந்தித்த போதும் ஆங்கிலேய அரசுக்கு அடிபணிய மறுத்தவர் நேதாஜி. வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் வரலாற்று சிறப்பான நிகழ்வு அரங்கேறி உள்ளது.

இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம்; பேரிடரை எதிர்கொள்ள நவீன கருவிகள் நம்மிடம் உள்ளது. தேசிய பேரிடர் படையை நாம் வலுபடுத்தி உள்ளோம், நவீன படுத்தி உள்ளோம்.

விண்வெளி தொழில்நுட்பம் முதல் திட்ட மேலாண்மை வரை சிறப்பான நடைமுறைகள் ஏற்கப்பட்டன. அணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அணைகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி உள்ளோம்.

சுதந்திர இந்தியா கனவில் நம்பிக்கை இழக்காதீர்கள். இந்தியாவை அசைக்கக்கூடிய சக்தி உலகில் இல்லை என்று நேதாஜி கூறுவார். 

சுதந்திர இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் இலக்கை இன்று நாம் கொண்டுள்ளோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆவதற்குள், 2047க்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம் என குறிப்பிட்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகையில், இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்தையும் கொடுத்த நேதாஜிக்கு உரிய அஞ்சலி இது என தெரிவித்தார்.

Tags:    

Similar News