இந்தியா
தேர்தல் ஆணையம்

5 மாநில தேர்தல் - பொதுக்கூட்டங்களுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு

Published On 2022-01-22 13:15 GMT   |   Update On 2022-01-22 13:15 GMT
கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 மாநில சட்டசபை தேர்தலில் பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 8-ம் தேதி தடைவிதித்தது.
புதுடெல்லி:

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் உத்தர பிரதேசத்துக்கு மட்டும் மே மாதம் முடிவடைகிறது. மற்ற மாநிலங்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் முடிவடைகிறது.
 
இதையொட்டி, இந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் ஈடுபட்டது. ஒமைக்ரானால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. ஆனாலும், திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவுசெய்து தேர்தல் தேதியையும் சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி-14-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
 
மணிப்பூரில் 2 கட்டமாகவும் (பிப்ரவரி 27, மார்ச் 3), உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாகவும் (பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை) தேர்தல் நடக்கிறது. வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்படுகிறது.

கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 மாநில சட்டசபை தேர்தலில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் இன்று 5 மாநில தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக் கூட்ட  முடிவில் தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News