இந்தியா
அப்துல் ரகுமான்

கேரள வனத்துறையில் ஓய்வு பெற்று 16 ஆண்டுகளுக்கு பிறகு பதவி உயர்வு பெற்ற அதிகாரி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் நடவடிக்கை

Published On 2022-01-22 11:12 GMT   |   Update On 2022-01-22 11:12 GMT
ஓய்வு பெற்று 16 ஆண்டுகளுக்கு பிறகு அப்துல் ரகுமானுக்கு கேரள வனத்துறையில் பதவி உயர்வு வழங்க கேரள வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்.

இவர் கடந்த 1984-ம் ஆண்டு கேரள வனத்துறையில் வனச்சரக அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவரது பணி காலத்தில் பாலக்காடு வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சந்தன கட்டைகள் திருட்டு போனது.

இது தொடர்பாக கேரள வனத்துறை இவர் மீது நடவடிக்கை எடுத்தது. மேலும் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது.

இதன்காரணமாக அப்துல் ரகுமானுக்கு வனத்துறையில் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அப்துல் ரகுமான் கடந்த 2006-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் தன்மீதான வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் தனக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை வழங்க கேட்டு கேரள நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது.

அப்துல் ரகுமான் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு கேரள வனத்துறையில் வழங்க வேண்டிய பதவி உயர்வை முன்தேதியிட்டு வழங்க சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து ஓய்வு பெற்று 16 ஆண்டுகளுக்கு பிறகு அப்துல் ரகுமானுக்கு கேரள வனத்துறையில் பதவி உயர்வு வழங்க கேரள வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் அப்துல் ரகுமானின் ஓய்வூதிய பண பலனும் அதிகரிக்கும்.

Tags:    

Similar News