இந்தியா
சித்தராமையா

பாஜக செய்யும் ஊழலுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு: சித்தராமையா குற்றச்சாட்டு

Published On 2022-01-22 03:39 GMT   |   Update On 2022-01-22 03:39 GMT
பா.ஜனதாவினர் ஊழலில் ஈடுபட்டு வந்தால், அதற்கான ஆதரவை ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் அளிக்கின்றனர். பா.ஜனதா செய்யும் ஊழலுக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியினரும் துணை போகின்றனர்.
பெங்களூரு :

பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த காந்தராஜ், காங்கிரசின் கொள்கைளை ஏற்று கட்சியில் இணைந்துள்ளார். நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே கொள்கைகள் இருக்கிறது. ஜனதாதளம் (எஸ்) சந்தர்ப்பவாத கட்சியாகும். அந்த கட்சிக்கு என்று கொள்கை எதுவும் கிடையாது. பா.ஜனதாவினர் ஆர்.எஸ்.எஸ். சொல்வதை கேட்டு நடக்க கூடியவர்கள். அந்த கட்சிக்கு என்று தனிக்கொள்கை எதுவும் இல்லை.

பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இந்தியாவின் கடன் ரூ.53 லட்சம் கோடியாக இருந்தது. இந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் ரூ.135 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. பா.ஜனதா ஆட்சியில் நடந்த பெரிய சாதனை இது ஒன்று மட்டுமே. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் 702 விவசாயிகள் தங்களது உயிரை பறி கொடுத்திருக்கிறார்கள்.

கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி ஒரு போதும் மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்ததில்லை. எடியூரப்பா ஆபரேசன் தாமரை திட்டத்தின் மூலமாகவே பா.ஜனதாவை ஆட்சி அமைக்க செய்திருந்தார். மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. கமிஷன் பெறுவதில் மட்டுமே பா.ஜனதாவினர் குறியாக உள்ளனர். 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் பகிரங்க குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

இதை விட பா.ஜனதாவினர் ஊழலில் ஈடுபடுவதற்கான ஆதாரம் வேறு எதுவும் தேவையில்லை. பா.ஜனதாவினர் ஊழலில் ஈடுபட்டு வந்தால், அதற்கான ஆதரவை ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் அளிக்கின்றனர். பா.ஜனதா செய்யும் ஊழலுக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியினரும் துணை போகின்றனர். மாநிலத்தில் காங்கிரஸ் அலை வீசத் தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News