இந்தியா
ஏடிஎம் மையத்தில் பதுங்கி இருந்த நாகபாம்பு

ஏ.டி.எம். மையத்தில் பதுங்கி இருந்த 4 அடி நீள நாகபாம்பு- இளைஞர் அலறி அடித்து ஓட்டம்

Published On 2022-01-20 04:51 GMT   |   Update On 2022-01-20 04:51 GMT
ஏ.டி.எம். மையத்தில் நாகபாம்பு பதுங்கியிருந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கைபமங்கலம் பகுதி உள்ளது. இங்கு ஒரு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

இந்த மையத்தில் பொது மக்கள் அதிகளவில் பணம் எடுத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இளைஞர் ஒருவர் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பணம் எடுத்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் பின்னால் சிறிய அசைவு தென்பட்டது.அதை இளைஞர் பார்த்த போது 4 அடி நீள நாகபாம்பு பதுங்கி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் அலறி அடித்து வெளியே ஓடி வந்தார்.

பின்னர் அந்த வழியாக சென்றவர்களுக்கு இது குறித்து தெரிவித்தார்.அவர்கள் பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் நாகபாம்பு என்பதால் பயத்தில் யாரும் பிடிக்கவில்லை.பின்னர் இதுகுறித்து கைபமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஹரி மத்திலகம் தலைமையிலான வனத் துறை ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பணம் எடுக்கும் எந்திரம் பின்னால் பதுங்கி இருந்த நாகபாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை அங்குள்ள காட்டு பகுதியில் கொண்டு சென்று விட்டனர். ஏ.டி.எம். மையத்தில் நாகபாம்பு பதுங்கியிருந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News