இந்தியா
மந்திரி சுதாகர்

மக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் பொறுப்பு: மந்திரி சுதாகர்

Published On 2022-01-20 03:16 GMT   |   Update On 2022-01-20 03:16 GMT
தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு, கொரோனா பாதிப்பு வந்தாலும், அவர்களது உயிரை பாதுகாக்க முடியும் என்பது இந்த தருணத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
பெங்களூரு :

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை. அதே நேரத்தில் மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், இந்த கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்களுக்கு ஆதரவான முடிவு எடுக்கப்படும்.

இதற்காக வருகிற 21-ந் தேதி (அதாவது நாளை) நடைபெறும் நிபுணர்கள் குழுவினருடனான ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்ய முடிவு செய்துள்ளோம். மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஒரு சில கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது கட்டாயமாகும். மக்களின் உயிரை பாதுகாப்பதுடன், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவும் சரியான முடிவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எடுப்பார்.

இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மாநிலத்தில் கொரோனா நிலை பற்றிய சரியான தகவல் கிடைக்கும். அதன்பிறகு, நிபுணர்களுடன் ஆலோசித்து மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நல்ல முடிவை முதல்-மந்திரி எடுப்பார். இது மக்களுக்கான அரசு. மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தும் அரசாக உள்ளது. எனவே மக்கள், வியாபாரிகள் யாரும் ஆதங்கப்பட வேண்டாம். உங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால், கொரோனா பரவலை தடுக்க சாத்தியமில்லை என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு, கொரோனா பாதிப்பு வந்தாலும், அவர்களது உயிரை பாதுகாக்க முடியும் என்பது இந்த தருணத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதனால் தான் தடுப்பூசி போட்டு கொள்ளும்படி மக்களை அரசு வலியுறுத்துகிறது. மக்களும் தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News