இந்தியா
குமாரசாமி

கொரோனா விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்படக்கூடாது: குமாரசாமி

Published On 2022-01-20 03:00 GMT   |   Update On 2022-01-20 03:00 GMT
பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்படக்கூடாது என முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூருவில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியமாகும். நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் 41 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மக்களின் நிலைமையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது சரியானதாக இருக்கும்.

இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் அமலில் உள்ள ஊரடங்கை திரும்ப பெறுவதா?, வேண்டாமா? என்பதில் அரசு குழப்ப நிலையிலேயே இருக்கிறது. ஏனெனில் அவர்களது கட்சியை சேர்ந்தவர்களே ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், கொரோனா விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்படக்கூடாது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், கொரோனா பரவலை தடுக்க வேண்டியது அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொருத்தே இருக்கும்.

ஊரடங்குக்கு மக்கள் மத்தியிலும், வியாபாரிகள் மத்தியிலும் எதிர்ப்பு இருந்தாலும், நிபுணர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, அதன்பிறகே தெளிவான முடிவை அரசு எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும். நாட்டில் பசியால் உயிர் இழப்போர் யாரும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தவறான தகவலை தெரிவித்துள்ளது. நாட்டில் எத்தனையோ மக்கள் சரியான உணவு கிடைக்காமல் உயிர் இழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மக்கள் எத்தனையோ பேர் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதை மத்திய அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா சந்தர்ப்பத்தில் உணவு கிடைக்காத பலர், தங்களது நிலையை மாற்றி தவறான பாதையில் சென்ற உதாரணங்களும் இருக்கிறது. மக்கள் கஷ்டத்தை அனுபவிக்கும் நேரத்தில், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. ஒருபுறம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், மறுபுறம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News