இந்தியா
12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி - மத்திய அரசு அதிகாரி தகவல்

Update: 2022-01-17 05:46 GMT
நாடு முழுவதும் 93 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியையும், 69.8 சத வீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தி உள்ளனர்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் தேசிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கி வைத்தார்.

கோவிஷீல்டு, கோவேக் சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்ததாக பிப்ரவரி 2-ந் தேதி முதல் அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.

மார்ச் 1-ந் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணைய நோயுடன் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பின்னர் மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கடந்த 3-ந் தேதியில் இருந்து 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தடுப்பூசி நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. முன் எச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.கடந்த 10-ந் தேதியில் இருந்து சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 5 மாநில சட்டசபை தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள், இணை நோய்களுடன் இருக்கும் 60 வயது முதியவர்கள் ஆகியோருக்கு முன் எச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் ஒரு ஆண்டு முடிந்துள்ளது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 93 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியையும், 69.8 சத வீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தி உள்ளனர். 43.19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன் எச்சரிக்கை (பூஸ்டர்) தவணை செலுத்திக் கொண்டனர்.

15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 3.38 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்பட்ட 13 தினங்களில் 45 சதவீத பேருக்கு முதல் தவணை கோவேக்சின் செலுத்தப்பட்டு உள்ளது.

15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி இந்த மாத இறுதியில் முடிவடையும். மொத்தம் 7.4 கோடி சிறுவர்களுக்கு செலுத்தப்படுகிறது.

இதன் 2-வது தவணை தடுப்பூசி இந்த மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடங்குகிறது என்று கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஜனவரி இறுதிக்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 7.4 கோடி சிறுவர்களுக்கு முதல் டோஸ் செலுத்த இலக்கு வைத்துள்ளோம். பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். பிப்ரவரி இறுதிக்குள் அதை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க இருக்கிறோம். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் செலுத்திய பிறகு இந்த திட்டம் தொடங்கப்படும்.

இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவது முக்கியம். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று ஒன்றிணைந்து தொற்று நோயை பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய குழந்தை மருத்துவ அகடாமி முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் பிரமோத் ஜோக் கூறும்போது, ‘குழந்தைகளுக்கான தடுப்பூசி வரம்பை உயர்த்துவது வரவேற்கத்தக்கதாகும். 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிப்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார்.

Tags:    

Similar News