பஞ்சாப் முதலமைச்சரின் உடன் பிறந்த சகோதரர் மனோகர் சிங்கிற்கு சீட் கொடுக்க காங்கிரஸ் மறுத்துவிட்டதால் அவர் சுயேட்சையாக களம் காண்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் தேர்தல் - சுயேட்சையாக களம் இறங்க முதலமைச்சரின் சகோதரர் முடிவு
பதிவு: ஜனவரி 16, 2022 23:20 IST
பஞ்சாப் முதல்வரின் சகோதரர் டாக்டர் மனோகர் சிங்
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தேர்வில் ஆளும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வந்தது. முதல் கட்டமாக 86 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்கவுர் சாஹிப் தொகுதியில் தற்போதைய முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிடுகிறார். துணை முதல்வர்களான சிக்ஜிந்தர் சிங் ரந்தவாதேரா பாபா நானக் தொகுதியில் இருந்தும், ஓம் பிரகாஷ் சோனி அமிர்தசரஸ் மத்திய தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.
பஞ்சாப் காங்கிரசில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே சீட் என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில் பஞ்சாப் முதலமைச்சரின் உடன் பிறந்த சகோதரர் மனோகர் சிங்கிற்கு போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனால், கோபம் அடைந்த மனோகர் சிங் பாசி, பாஸ்சி பதனா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பாஸ்சி பத்தனா தொகுதியில் போட்டியிட நான் காத்திருந்தேன். ஆனால் கட்சி (காங்கிரஸ்) டிக்கெட் வழங்க மறுத்து விட்டது. இதனால் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன். 2007 ஆண்டு தேர்லில் இதேபோல் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இவ்வாறு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர் டாக்டர் மனோகர் சிங் தெரிவித்துள்ளார்.
பாஸ்சி பதனா தொகுதியில் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. குர்பீரித் சிங் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து களம் இறங்கப் போவதாக பஞ்சாப் முதலமைச்சரின் சகோதரர் அறிவித்துள்ளது பஞ்சாப் அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.