இந்தியா
போலீஸ் விசாரணை

பீகார் கள்ளச்சாராய பலி 11 ஆக உயர்வு... நிதிஷ் குமார் கட்சி மீது பாஜக தலைவர் கடும் தாக்கு

Published On 2022-01-16 10:29 GMT   |   Update On 2022-01-16 10:29 GMT
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாட்னா:

மதுவிலக்கு தடைச்சட்டம் அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

இந்நிலையில், நாலந்தா மாவட்ட தலைநகரில், வெள்ளிக்கிழமை இரவு கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், சனிக்கிழமை காலையில் 4 பேரும், மாலையில் 4 பேரும் உயிரிழந்தனர். இன்று காலையில் மேலும் 3 பேர் இறந்துவிட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் மருத்துவ சிசிச்சையில் உள்ளனர். 

இந்த சம்பவம்  குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சம்பந்தப்பட்ட சோசராய் காவல் நிலைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை, அதன் கூட்டணி கட்சியான பாஜகவின் மாநில தலைவர் சஞ்சய் ஜெய்வால் விமர்சித்துள்ளார். உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மதுபான மாஃபியாக்கள் இடையே உள்ள பிணைப்பை உடைக்கும்வரை, சட்டவிரோத மதுபான வியாபாரம் என்ற ஹைட்ரா தலை அரக்கனை கொல்ல முடியாது என்பதை ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் ஒப்புக்கொள்வது நல்லது எனறு அவர் கூறினார்.
Tags:    

Similar News