இந்தியா
திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

திருப்பதி கோவிலில் பக்தர்கள் திடீர் போராட்டம்

Published On 2022-01-15 06:55 GMT   |   Update On 2022-01-15 06:55 GMT
திருப்பதி கோவிலில் நேற்று 37,304 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 9 ஆயிரத்து 645 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 2.13 கோடி உண்டியலில் காணிக்கை வசூல் ஆனது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று முன்தினம் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் 12000 பக்தர்களும், இலவச தரிசன டிக்கெட்டில் 10,000 பக்தர்களும் நேரடி இலவச டிக்கெட்டில் உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேர் என தினமும் 27 ஆயிரம் பேருக்கு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஆந்திர மாநிலத்தில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. இலவச தரிசன டிக்கெட் பெற்ற உள்ளூர் பக்தர்கள் நேற்று ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக சென்றனர்.

அவர்களை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அங்குள்ள குடோன்களில் அடைத்து வைத்து தரிசனத்திற்கு அனுப்பாமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 5 மணி நேரம் குடோன்களில் அடைத்து வைத்து அவர்களுக்கு குடிநீர் கூட வழங்கவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் வழியிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்

பின்னர் இரவு 8.30 மணி அளவில் பக்தர்கள் தரிசனம் முடித்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் கோவில் முன்பாக அமர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களை வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

எந்த காரணத்தை கொண்டும் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனக்கு எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர்

திருப்பதி கோவிலில் நேற்று 37,304 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 9 ஆயிரத்து 645 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 2.13 கோடி உண்டியலில் காணிக்கை வசூல் ஆனது. 

Tags:    

Similar News