இந்தியா
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2022-01-07 06:32 GMT   |   Update On 2022-01-07 06:32 GMT
சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடம் இருந்து மூன்று ஏ.கே.56 வகை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் வரைபடங்களையும் அவர்கள் வைத்திருந்தனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் உள்ள சோல்வா என்னும் கிராமத்தில் இருக்கும் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் பாதுகாப்புப் படையினர் அந்த வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். நேற்று இரவு முதல் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

அந்த வனப்பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை தெரிந்து கொண்ட பாதுகாப்புப் படையினர் அவர்கள் தப்பி விடாதபடி சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினார்கள். இன்று அதிகாலை வரை இரு தரப்பினருக்கும் இடையே சண்டை நீடித்தது.

இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்கள் மூவரும் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் ஒருவன் ஸ்ரீநகரை சேர்ந்த வாசிம் என்று அடையாளம் தெரிந்தது.

மற்ற 2 பயங்கரவாதிகளும் யார் என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடம் இருந்து மூன்று ஏ.கே.56 வகை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் வரைபடங்களையும் அவர்கள் வைத்திருந்தனர்.

இதன் மூலம் அவர்கள் மிகப்பெரிய நாசவேலை சதித்திட்டத்துடன் காஷ்மீருக்குள் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. சரியான நேரத்தில் 3 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதால் மிகப்பெரிய நாசவேலை தவிர்க்கப்பட்டு இருப்பதாக காஷ்மீர் மாநில உயர் போலீஸ் அதிகாரி விஜய குமார் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை கடந்த ஒரு வாரத்தில் பாதுகாப்புப் படையினர் 16 பயங்கரவாதிகளை காஷ்மீரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News