இந்தியா
திருப்பதி மலைப்பாதை

கனமழையால் சேதமடைந்த திருப்பதி மலைப்பாதையில் 10-ந்தேதி முதல் வாகனங்கள் அனுமதி

Published On 2022-01-06 05:56 GMT   |   Update On 2022-01-06 05:56 GMT
வரும் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளதால் அதற்கு முன்பு திருப்பதி மலைப்பாதையை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சித்தூர், கடப்பா, அனந்தபுரம், நெல்லூர் ஆகிய 4 மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. திருப்பதியிலும் கனமழை பெய்தது.

திருப்பதியில் அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் பலத்த மழையால் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மலைப்பாதை பலத்த சேதம் அடைந்தது.

திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் அலிபிரியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதையடுத்து அனைத்து வாகனங்களும் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் சாலையில் திருப்பி விடப்பட்டது.

சேதமடைந்த மலைப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் அருகே உள்ள இணைப்பு சாலை வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.

மலைப்பாதையை டெல்லி, ஐதராபாத், சென்னையை சேர்ந்த ஐஐடி பேராசிரியர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கேரளா அமிர்தா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ட்ரோன் கேமரா மூலம் மலைப்பாதை பகுதியை ஆய்வு செய்து அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாதையை அமைப்பது குறித்தும், 3-வது பாதை அமைப்பது குறித்தும் தேவஸ்தான அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மலைப்பாதை சீரமைக்கும் பணிகள் கடந்த 2 மாதமாக விறுவிறுப்பாக நடந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு ஏற்ற நிலையில் மலைப்பாதை உள்ளது.

வரும் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளதால் அதற்கு முன்பு மலைப்பாதையை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் சீரமைக்கப்பட்ட மலைப்பாதை வாகன போக்குவரத்திற்காக திறக்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News