இந்தியா
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க திரண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒருபகுதி.

சபரிமலையில் மகர ஜோதியை காண பக்தர்களுக்கு கூடுதல் இடங்கள் தேர்வு

Published On 2022-01-04 10:34 GMT   |   Update On 2022-01-04 10:34 GMT
திருவாபரண ஊர்வலம் முடிந்து ஐயப்பன் வருகிற 14-ந் தேதி பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். இதனை காண சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
திருவனந்தபுரம்:

சபரிமலையில் மகர விளக்கு திருவிழா நடந்து வருகிறது.

இதற்காக கடந்த மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டது.31-ந் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தினமும் 60 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதனால் வெளி மாநிலங்களில் இருந்து கூடுதல் பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். அவர்கள் சன்னிதானத்தில் தங்கவும், பெருவழிப்பாதையில் செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மகர விளக்கு பூஜைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கிறது. அன்று ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் ஊர்வலமாக சபரிமலை கொண்டு செல்லப்படும். இந்த ஊர்வலம் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.

இந்த பவனி காட்டுப்பாதை வழியாக செல்லும். இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இதில் குறைந்த அளவே பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பங்கேற்போருக்கு அனுமதி அட்டை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திருவாபரண ஊர்வலம் முடிந்து ஐயப்பன் வருகிற 14-ந் தேதி பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். இதனை காண சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இம்முறை ஒரே பகுதியில் அதிகமானோர் கூடுவதை தவிர்க்க காட்டுப்பகுதியில் கூடுதல் இடங்களை ஒதுக்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. அதன்படி பம்பை மலையின் உச்சி பகுதியில் பக்தர்களை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தவிர ஜோதி தெரியும் இடங்களில் பக்தர்கள் நெரிசலின்றி நின்று பார்க்கவும், அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கவும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.



Tags:    

Similar News