இந்தியா
திருப்பதி மலையில் 3வது சாலை அமைக்கப்பட உள்ள அன்னமய்யா சென்ற பாதை

திருப்பதி மலையில் 3-வது சாலை அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்

Published On 2022-01-03 05:47 GMT   |   Update On 2022-01-03 05:51 GMT
திருப்பதி மலையில் 3-வது அமைத்தால் ஐதராபாத், ஒய்.எஸ்.ஆர்.கடப்பா மாவட்டம் வழியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னமய்யா பாதை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திருப்பதி:

திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பாதையில் விரைவில் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பாதையை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

ஏழுமலையான் பக்தரான அன்னமாச்சார்யா நடந்து வந்த பாதையை மேம்படுத்த வேண்டும். இதற்கான விரிவான அறிக்கையை தயாரிக்க வேண்டும்.

மாமண்டூரில் இருந்து திருமலை பார்வேட்டை மண்டபம் வரை அன்னமய்யா சாலை அமைய உள்ளது. எனவே அறங்காவலர் குழு எடுத்த முடிவின்படி உடனே விரிவான வரையறை தயார் செய்து வனத்துறை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த சாலை அமைத்தால் ஐதராபாத், ஒய்.எஸ்.ஆர்.கடப்பா மாவட்டம் வழியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னமய்யா பாதை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அண்மையில் பெய்த கனமழையால் அலிபிரியில் இருந்து திருமலைக்கு வரும் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்து, மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடும் சேதம் அடைந்தது.

வரும் காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் பக்தர்களுக்கு எந்தவித சங்கடமும் ஏற்படாத வகையில் அன்னமய்யா வழியை மாற்றாக பயன்படுத்தலாம்.

விரைவில் டெண்டர் கோரப்பட்டு பாதை மேம்படுத்தப்படும். மாமண்டூரில் இருந்து திருமலை வரையிலான 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதியில் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி காலத்தில் இந்த வழியை மேம்படுத்தும் யோசனை உருவானது.

அப்போதைய அறங்காவலர் குழுவிலும் விவாதிக்கப்பட்டது. தற்போது முதல்வர் ஜெகன்மோகன் வழிகாட்டுதலின்படி அன்னமய்யா சாலை மேம்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News