இந்தியா
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நிற்கும் மக்கள்

ஏ.டி.எம். கட்டண உயர்வு அமலுக்கு வந்தது - இழப்பை தவிர்ப்பது எப்படி?

Published On 2022-01-01 10:28 GMT   |   Update On 2022-01-01 11:45 GMT
இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.
புதுடெல்லி:

வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் வங்கி ஏ.டி.எம்.களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். பிற வங்கி ஏ.டி.எம்.களில் என்றால் மாநகரங்களில் 3 முறை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஊரகப் பகுதிகள் என்றால் 5 முறை கட்டணம் கிடையாது. அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்பட்டுவந்தது. 

இந்த பரிவர்த்தனை கட்டணத்தை 21 ரூபாயாக உயர்த்தி பல்வேறு வங்கிகள் கடந்த ஆண்டு அறிவித்தன. இந்த கட்டணத்தை  ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்திக்கொள்ள வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதி வழங்கியது. அதன்படி, புத்தாண்டு தினமான இன்று முதல் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து  ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும். 

இந்த கட்டண உயர்வானது, முந்தைய கட்டணத்தை விட ஒரு பரிவர்த்தனைக்கு ஒரு ரூபாய்தான் அதிகம் என்றாலும், அடிக்கடி ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் குறிப்பிட்ட தொகையை சேவைக்கட்டணம் என்ற பெயரில் இழக்கவேண்டியிருக்கும். இந்த இழப்பை தவிர்க்க வேண்டுமானால், பொதுமக்கள் தங்களுக்குரிய மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுக்காமல் இருப்பதுதான் ஒரே தீர்வு ஆகும்.
Tags:    

Similar News