இந்தியா
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

பிரிட்டன் விமானங்கள் கொல்கத்தா வருவதற்கு ஜனவரி 3 முதல் தடை விதிப்பு

Published On 2021-12-30 21:19 GMT   |   Update On 2021-12-30 21:19 GMT
மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பால்,கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமையன்று அம்மாநிலத்தின் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  ஓமிக்ரான் நோய் தொற்றும் உள்ளது.  தற்போதைய நிலைமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளால் தொற்று பரவுகிறது. இதை தடுக்க சர்வதேச அளவில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

இதையடுத்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க அரசு சார்பில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 3 ஆம் தேதி முதல் மேற்கு வங்க மாநிலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தில்லா நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும்  கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறும் முன் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  சோதனை கவுன்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு மேற்கு வங்க மாநில அரசு தமது கடிதத்தில் தெரிவித்துள்ளது. 

இதனிடையே மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,128 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 12 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News