மக்களின் விருப்பம், அரசின் பரிந்துரைகள் மற்றும் சட்டசபையின் உரிமைகளை நிராகரிக்க கவர்னர் நியமிக்கப்படவில்லை என்று சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
மராட்டிய சட்டசபை சபாநாயகர் தேர்தலை நடத்த மாநில அரசு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் அனுமதி கேட்டு இருந்தது. ஆனால் அவர் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் தேர்தலை நடத்துவது சட்டவிரோதம் என கூறிவிட்டார். இதன்காரணமாக மாநில அரசு, கவர்னர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டி வருமாறு:-
சபாநாயகர் அரசியல் அமைப்புக்கு எதிராக நடந்தால், மாநில அரசும் சில அரசியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது வரும். மராட்டிய கவர்னர் அதிக சிரத்தை எடுத்து கொள்வது போல தெரிகிறது. இது அவருக்கு அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
மக்களின் விருப்பம், அரசின் பரிந்துரைகள் மற்றும் சட்டசபையின் உரிமைகளை நிராகரிக்க அவர் நியமிக்கப்படவில்லை. கவர்னருக்கு முதல்-மந்திாி எழுதிய கடிதம் தொடர்பாக நான் பேசவில்லை. அதே நேரத்தில் கவர்னர் அதிகமாக ஆய்வு செய்ய வேண்டாம் என ஏற்கனவே கூறிவிட்டேன்.
அஜீரண கோளாறு ஏற்பட்டால் அது வயிற்று வலியை ஏற்படுத்தும். அந்த பிரச்சினைக்கு மாநில சுகாதாரத்துறை சிகிச்சை அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.