இந்தியா
ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை

கேரளாவில் இரவுநேர ஊரடங்கு - 10 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Published On 2021-12-27 16:20 GMT   |   Update On 2021-12-27 16:20 GMT
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருவனந்தபுரம்:

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.  

அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு முறைகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படும். ஒமைக்ரான் பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில், கேரளாவில் டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணிக்கு பிறகு எந்தவித கொண்டாட்டங்களுக்கும் அனுமதி கிடையாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடற்கரைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுப் பூங்காக்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

கேரளாவில் பார்கள், ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

கேரளாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதிவாய்ந்தவர்களல் 98 சதவீதம் பேர் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி உள்ளனர். 77 சதவீதம் பேர் இரண்டு டோஸ்களும் செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News