இந்தியா
தேர்தல் ஆணையம்

தேர்தலுக்கு தயாராகும் ஐந்து மாநிலங்களில் கொரோனா நிலவரம்- தேர்தல் ஆணையம் ஆய்வு

Published On 2021-12-27 10:48 GMT   |   Update On 2021-12-27 10:48 GMT
கோவிட் நெறிமுறைகள் மற்றும் உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்கள் குறித்து தேர்தல் ஆணையத்தடம் சுகாதாரத்துறை செயலாளர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, உத்தர பிரதேச தேர்தலை ஒத்திவைக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்திடம் அலகாபாத் உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டங்களை நிறுத்தாவிட்டால், அதன் முடிவுகள் கொரோனா இரண்டாவது அலையை விட மோசமாக இருக்கும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது

இந்நிலையில்,  மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷனுடன் தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து மற்றும்  ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் கொரோனா நிலவரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அப்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமீபத்திய காலங்களில் வெளியிடப்பட்ட நெறிமுறைகள் மற்றும் உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்கள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கமாக எடுத்துரைத்தார். 

இதேபோல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை, சசஸ்திர சீமா பால் மற்றும்  எல்லைப் பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணையம் கலந்துரையாடியது. அப்போது, தேர்தலின்போது போதைப்பொருள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்யும்படி  போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். 
Tags:    

Similar News