இந்தியா
கஜேந்திர செகாவத்தை சந்தித்தார் அமரிந்தர் சிங்

பஞ்சாப்பில் பா.ஜ.க. - அமரிந்தர் சிங் கூட்டணி: தேர்தலை கூட்டாக சந்திக்க முடிவு

Published On 2021-12-17 14:14 GMT   |   Update On 2021-12-17 14:14 GMT
பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த கூட்டணி 101 சதவீதம் வெற்றி பெறும் என பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்கு அரசியல் பிரச்சாரங்கள் தற்போதே தொடங்கி உள்ளன.  ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் வியூகத்துடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது.  

இந்நிலையில் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மாநில சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது.  

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய அமரிந்தர்சிங் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறினார்.  பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கிய அவர், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் கூட்டணி என்று பா.ஜ.க. தலைவர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்துச் செய்தது. இந்நிலையில், அழைப்பின் பேரில், பஞ்சாப் மாநில பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான கஜேந்திர செகாவத்தை, அமரிந்தர் சிங் சந்தித்து பேசினார். புதுடெல்லியில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.



பின்னர் செய்தியாளர்களிடம்  செகாவத் பேசுகையில், ‘நான் இன்று தெளிவுபடுத்தி விடுகிறேன். பா.ஜ.க.வும், அமரிந்தர் சிங்கும் பஞ்சாப் மாநில தேர்தலில் இணைந்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இருவரும் கூட்டாக பணியாற்றுவோம்.  சரியான நேரத்தில் தொகுதி பங்கீடு விபரம் வெளியிடப்படும்’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமரிந்தர் சிங் பேட்டியளித்த போது, ‘எங்கள் கூட்டணி தேர்தலில் 101 சதவீதம் வெற்றி பெறும். எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்வதே வெற்றிக்கான முக்கிய அளவுகோலாக இருக்கும்’ என்றார்.

வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதால் பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.கவுடன் வைத்திருந்த கூட்டணியை சிரோமணி அகாலிதளம் கட்சி முறித்துக் கொண்டது.  தற்போது வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதால் பஞ்சாப் லோக் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News