இந்தியா
கொரோனா பரிசோதனை

கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு பாதிப்பு- இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 83 ஆக உயர்வு

Published On 2021-12-16 15:33 GMT   |   Update On 2021-12-16 15:33 GMT
டெல்லியில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் மட்டும் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
பெங்களூரு:

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு முதன் முதலில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான் குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஒமைக்ரான் இருக்கிறதா? என்பதற்கான பரிசோதனை மேற்கொள்ள ப்பட்டது. இதில் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதன்மூலம் டெல்லியில் ஒமைக்ரான் பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிறப்பு வசதிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் டெல்லியில் ஒமைக்ரான் தொற்று உருவாகி உள்ளது.

இந்நிலையில், இன்று மாலை கர்நாடக மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
Tags:    

Similar News