இந்தியா
அடிக்கல் நாட்டு விழாவில் அமித் ஷா

இந்து வழிபாட்டு தலங்கள் இழந்த பெருமைகளை பிரதமர் மோடி மீட்டு வருகிறார் -அமித் ஷா புகழாரம்

Published On 2021-12-11 12:42 GMT   |   Update On 2021-12-11 12:42 GMT
வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்தவர்கள் முன்னேறிச் செல்லும் ஆற்றல் தரும் மையங்களாக வழிபாட்டுத் தலங்கள் திகழ்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
அகமதாபாத்: 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், காட்வா படிதர் பிரிவின மக்களின் இஷ்ட தெய்வமான மா உமியாவிற்கு ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் உமியாதம் கோவில் கட்டப்படுகிறது. 74 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் இந்த கோவில் அமைகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று கோவில் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

மொகலாய மன்னர் ஔரங்கசிப் காலத்தில் பலமுறை தகர்க்கப்பட்ட வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலை மேம்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பிரதமர் மோடியால் புதுப்பிக்கப்பட்ட அந்த கோயில் திறப்பு நிகழ்ச்சியை 13ம் தேதி நாம் பார்க்கலாம். 

கேதார்நாத் கோயிலில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் சிலை,  கடந்த 2013ம் ஆண்டு  அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அது புதுப்பிக்கப்பட்டு பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.  

பல காலமாக இந்து வழிபாட்டுத் தலங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்தன. அவற்றின் பெருமைகளை மீட்டு வர யாரும் முன்வரவில்லை.  2014ம் ஆண்டு முழு பெரும்பான்மையுடன் மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி தொடங்கியது. இழந்த பெருமைகள் மீட்கப்பட்டதுடன், தற்போது இந்து வழிபாட்டு தலங்கள் எந்தவித அச்சமுமின்றி புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 

முன்பெல்லாம் மக்கள் கோயில்களுக்கு செல்ல வெட்கப்பட்டார்கள். தற்போது மோடி அரசாங்கம் என்ற புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது. கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். 

கோயில்கள் என்பது வெறும் மத வழிபாட்டு மையங்களாக இல்லாமல், சமூக சேவை மையங்களாகவும் உள்ளன. வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்தவர்கள் தங்கள் சிரமங்களைத் தாண்டி முன்னேறிச் செல்வதற்கான ஆற்றல் தரும் மையங்களாகவும் அவர் திகழ்கின்றன.

இவ்வாறு தமது பேச்சில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.
Tags:    

Similar News