இந்தியா
விவசாயிகள்

டெல்லி புறநகரில் 3 இடங்களில் விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்

Update: 2021-12-11 06:55 GMT
விவசாயிகள் ஊருடுவலை தடுக்க அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் இன்னும் 2 நாட்களில் முழுமையாக அகற்றப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்து இருந்தனர்.
புதுடெல்லி:

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தார்கள்.

சிங்கு, திக்ரி, காஜிப்பூர் ஆகிய 3 இடங்களில் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் முடங்கியது.

விவசாயிகள் போராட்டம் ஓராண்டை கடந்து நீடித்த நிலையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். விவசாயிகளின் நிபந்தனைகளை ஏற்பதாகவும் உறுதிமொழி கொடுக்கப்பட்டது.

இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்படத்தொடங்கி உள்ளனர். தற்காலிக குடியிருப்புகளை அகற்றி விட்டு அவர்கள் இன்று காலை புறப்பட்டனர்.

சிங்கு எல்லைப்பகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு திரண்ட விவசாயிகள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உற்சாகத்தில் நடனம் ஆடி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

அங்கு அமர்ந்து தேசப்பக்தி பாடல்கள் பாடி பஜனை நடத்தினார்கள். அதன் பிறகு டிராக்டர்களில் நீண்ட அணிவகுப்பு போன்று பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றனர்.

அதேபோன்று திக்ரி எல்லையில் காலை 9 மணிக்கும், காஜிப்பூர் எல்லையில் காலை 10 மணிக்கும் விவசாயிகள் ஒன்று திரண்டனர். காஜிப்பூர் எல்லையில் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கொடி அசைத்து விவசாயிகள் சொந்த ஊருக்கு புறப்படுவதை தொடங்கி வைத்தார்.

அவர் கொடி அசைத்த பகுதியில் இருந்து விவசாயிகள் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தி விட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

பின்னர் ராகேஷ் திகாயத் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ள மத்திய அரசு எங்களுக்கு எழுத்துப் பூர்வமாக உறுதிமாழியை அளித்துள்ளது. அதை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் நாங்கள் மீண்டும் டெல்லிக்கு திரண்டு வந்து விடுவோம்.

விவசாயிகள் டெல்லியில் இருந்து கலைந்து செல்ல 4 முதல் 5 நாட்கள் ஆகலாம். நான் 15-ந்தேதி இங்கிருந்து புறப்பட்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். அதுவரை விவசாயிகளுடன் இங்குதான் இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் டெல்லி புறநகர் பகுதிகளில் இருந்து புறப்படுவதால் 380 நாட்களுக்கு பிறகு தேசிய நெடுஞ்சாலைகளில் இயல்புநிலை வரத்தொடங்கி உள்ளது. விவசாயிகள் ஊருடுவலை தடுக்க அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் இன்னும் 2 நாட்களில் முழுமையாக அகற்றப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்து இருந்தனர்.

எனவே அடுத்த வாரம் முதல் டெல்லியில் போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உள்ளது.


Tags:    

Similar News