இந்தியா
விவசாயிகள் போராட்டம்

போலீஸ் நடவடிக்கையால் விவசாயிகள் யாரும் உயிரிழக்கவில்லை -மத்திய அரசு தகவல்

Update: 2021-12-10 11:30 GMT
போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது போன்றவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் உள்ளது என மத்திய வேளாண் மந்திரி தோமர் தெரிவித்தார்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். எனினும், குறைந்தபட்ச ஆதரவு விலை, போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தி உள்ளனர். இதில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக கமிட்டி அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில்,  விவசாயிகளின் போராட்டம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கேள்விகளுக்கு பாராளுமன்றத்தில் வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், விவசாயிகள் நீண்டகாலம் நடத்திய போராட்டத்தின்போது போலீஸ் நடவடிக்கையால் விவசாயிகள் தரப்பில் யாரும் உயிரிழக்கவில்லை என்றார். 

‘போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது போன்றவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் உள்ளது. பூஜ்ஜிய பட்ஜெட் அடிப்படையிலான விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும், நாட்டின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப பயிர் செய்யும் முறையை மாற்றுவதற்கும், குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகவும் பயனுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் மாற்றுவதற்கான ஒரு குழுவை உருவாக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது’ என்றார் தோமர்.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த தோமர், சராசரி உற்பத்தி செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீத லாபம் கிடைக்கும் வகையில் தேசிய விவசாயிகள் ஆணையம்  அளித்த பரிந்துரையை 2018-19ல்  அரசாங்கம் ஏற்கனவே அமல்படுத்தி உள்ளது, என்றார். 
Tags:    

Similar News