இந்தியா
கேரளா டாக்டர்கள் வேலை நிறுத்தம்

கேரளாவில் இன்று முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் முதுகலை பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம்

Published On 2021-12-10 05:02 GMT   |   Update On 2021-12-10 05:02 GMT
ஆனால் கொரோனா தொற்று பரவல் உள்ள இக்கால கட்டத்தில் முதுகலை பயிற்சி டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஏற்றுக்கொள்ள முடியாது என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் வேலை பார்க்கும் முதுகலை பயிற்சி டாக்டர்கள் கூடுதல் ஊதியம், அதிக பணிச்சுமையை குறைப்பது மற்றும் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக அரசு மற்றும் பயிற்சி டாக்டர்கள் சங்கம் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பயிற்சி டாக்டர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் பயிற்சி டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்பட்டது.

இதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பயிற்சி டாக்டர்களுடன் அரசு 2 கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில் அவர்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில கோரிக்கைகள் கோர்ட்டு தொடர்புடையதாக இருப்பதால் நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறோம். ஆனால் கொரோனா தொற்று பரவல் உள்ள இக்கால கட்டத்தில் முதுகலை பயிற்சி டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே அவர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு வீணா ஜார்ஜ் கூறினார்.

Tags:    

Similar News