இந்தியா
எம்.பி.க்கள் வைகோ, சண்முகம்

மழை-வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் வைகோ-சண்முகம் கேட்ட கேள்விகளுக்கு மத்திய மந்திரி பதில்

Published On 2021-12-09 16:36 GMT   |   Update On 2021-12-09 16:36 GMT
மத்திய அரசின் அமைச்சகத்தின் சார்பில் அனுப்பப்படும் குழுவின் பரிந்துரையின்படி, நிதி உதவி வழங்கப்படுவதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.

சென்னை:

பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் வைகோ, சண்முகம் ஆகியோர் பேசியதாவது:-

அண்மையில், தமிழ்நாட்டில் பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், குறிப்பாக கடற்கரைப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட நிதி உதவி கோரி, தமிழக அரசிடம் இருந்து, கோரிக்கை விண்ணப்பம் ஏதேனும் வந்ததா?

அவ்வாறு இருப்பின், அதுகுறித்து அரசின் நிலை என்ன? எத்தனை பேர் இறந்தார்கள்? எவ்வளவு மதிப்பு சொத்துகள் சேதம் அடைந்தன?

பாதிப்புகளைக் கண்டு அறியவும், எவ்வளவு உதவிகள் வழங்கலாம் எனப் பரிந்துரை செய்யவும், ஒன்றிய அரசின் சார்பில் ஏதேனும் குழு அனுப்பப்பட்டதா?

இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக அரசு ஒரு கோரிக்கை விண்ணப்பம் கொடுத்து இருக்கின்றது. பலத்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு கட்ட, ரூ.549.63 கோடி நிதி உதவி கேட்டு இருக்கின்றார்கள். 54 பேர் இறந்தனர்; 6871 கால்நடைகள் இறந்தன; வீடுகளுக்கும், 51025.64 ஹெக்டேர் பயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டு இருக்கின்றது.

பேரிடர் மேலாண்மைப் பொறுப்புகள், மாநில அரசின் கடமை ஆகும். அதன்படி, மாநில பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து, மத்திய அரசின் விதி முறைகளின்படி இசைவு பெற்று, மாநில அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

கூடுதலாக, தேசிய பேரிடர் மீட்பு நிதியத்திற்காக, வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி, கடுமையான பாதிப்புகளுக்கு, மத்திய அரசின் அமைச்சகத்தின் சார்பில் அனுப்பப்படும் குழுவின் பரிந்துரையின்படி, நிதி உதவி வழங்கப்படுகின்றது.

அதன்படி, அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய, மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து இருக்கின்றது. அந்தக் குழு, நவம்பர் மாதம், 21 முதல் 24 வரை தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டது.

அந்த குழு அளிக்கின்ற அறிக்கையின் அடிப்படையில் விதிமுறைகளின்படி நிதி உதவி வழங்கப்படும்.

மேலும் 2021-22 நிதி ஆண்டில், தமிழக அரசுக்கு, எஸ்.டி.ஆர்.எப். நிதியில் இருந்து, 1088 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.“அதில் மத்திய அரசின் பங்கு 816 கோடி; மாநில அரசின் பங்கு 262 கோடி. மத்திய அரசின் பங்கு, முன்னதாகவே இரண்டு தவணைகளில் 408 கோடி ரூபாயை வழங்கி இருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News