இந்தியா
அமித் ஷா

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு- பாராளுமன்றத்தில் அமித் ஷா விளக்கம்

Published On 2021-12-06 11:06 GMT   |   Update On 2021-12-06 11:06 GMT
நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து ராணுவம் தரப்பில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமித் ஷா பேசினார்.
புதுடெல்லி:

நாகாலாந்தில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.  முதலில் பாராளுமன்ற மக்களவையிலும், பின்னர் மாநிலங்களவையிலும் அவர் உரை நிகழ்த்தினார்.

அவரது உரையின் விபரம் வருமாறு:-

நாகாலாந்தின் மோன் நகரில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 21 கமாண்டோ படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

அப்போது அங்கு வந்த வாகனத்தை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முற்பட்டனர். அது நிற்காமல் சென்றதால், சந்தேகத்திற்கிடமான அந்த வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் இருந்த 8 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  அந்த வாகனத்தை சோதனை செய்தபின்தான் அது தவறாக அடையாளம் காணப்பட்டது என்பது தெரிய வந்தது. 



இதையடுத்து வாகனத்தில் காயமடைந்த நிலையில் இருந்த இரண்டு பேர் உடனடியாக அருகில் இருந்த ராணுவ சிகிச்சை  மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இந்த செய்தி குறித்து கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து ராணுவத்திற்கு சொந்தமான 2 வாகனங்களுக்கு தீ வைத்ததுடன், ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். 

இதில் ஒரு பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். பல வீரர்கள் காயமடைந்தனர்.  இதையடுத்து கூட்டத்தை கலைக்கும் வகையிலும், சுய பாதுகாப்பு அடிப்படையிலும் பாதுகாப்பு படையினர் அங்கிருந்தவர்கள்  மீது துப்பாக்கியால் சுட்டதில் 7 பொதுமக்கள் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். உடனடியாக உள்ளூர் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தினர்.

இதற்கு பின்னர் டிசம்பர் 5ம் தேதி மாலை 250க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் திரண்டு வந்து மான் நகரில் உள்ள அசாம் ரைபிள் படை வீரர்கள் முகாமில் தீ வைத்தது. இதையடுத்து கும்பலை கலைக்க வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் உயிரிழந்தார்.  அங்கு பதற்றம் ஏற்பட்டாலும் நிலைமை  தற்போது கட்டுக்குள் உள்ளது.  நாகாலாந்து டி.ஜி.பி மற்றும் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். 

மாநில குற்றவியல் காவல் நிலையம் சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்கும்.

நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து ராணுவம் தரப்பில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

நாகாலாந்து சம்பவம் குறித்து செய்தி அறிந்தவுடன் அம்மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சரை நான் உடனடியாக தொடர்பு கொண்டு பேசினேன். நாகாலாந்து தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவரை மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டது.

இவ்வாறு தமது பேச்சின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார்.

இதனிடையே, நாகலாந்தில் பொதுமக்கள் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி  குறித்து ராணுவ சிறப்பு நீதிமன்றம் மூலம்  விசாரணை நடத்தப்படும் என்றும்,  மேஜர் ஜெனரல் பதவியில் உள்ள ஒரு அதிகாரி மூலம் இந்த விசாரணை நடைபெறும் என்றும் ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News