இந்தியா
சிறை தண்டனை

வசதி படைத்த மாற்று திறனாளிகள் உள்பட 11 பேரை ஏமாற்றி திருமணம்- சகோதரிகளுக்கு 3 ஆண்டு ஜெயில்

Published On 2021-12-06 05:55 GMT   |   Update On 2021-12-06 05:55 GMT
சகோதரிகள் இருவரும் தொடர்ந்து பலரை ஏமாற்றி பணம், நகைகளை மோசடி செய்துள்ளனர். கொச்சி வாலிபர் துணிந்து போலீசில் புகார் செய்ததால் இருவரும் சிக்கி கொண்டனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி வாலிபர் ஒருவர் கடவந்திரா போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், இந்தூர் பகுதியை சேர்ந்த மேகா (வயது 30) என்ற பெண்ணுடன் எனக்கு 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எர்ணாகுளத்தில் உள்ள கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமண நிகழ்ச்சி நடந்தது.

திருமணம் முடிந்த ஒரு சில நாட்களில் மேகா, வீட்டில் இருந்த ரூ.9.5 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளுடன் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதன்பின்னர்தான் அந்த பெண் என்னை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே அவரை கண்டுபிடித்து நகை, பணத்தை மீட்டு தருவதோடு, அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

இப்புகார் மனு மீது கடவந்தரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மேகா, அவரது சகோதரி பார்கவா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சகோதரிகள் இருவரும் வசதி படைத்த மாற்று திறனாளி வாலிபர்களை திருமணம் செய்து அவர்களுடன் ஒரு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு, பின்னர் நகை, பணத்துடன் மாயமாகி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதுபோல கேரளாவில் மட்டும் 4 பேர் உள்பட 11 பேரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இதில் பாதிக்கப்பட்ட பலர் குடும்ப கவுரவத்திற்கு பயந்து போலீசில் புகார் செய்யாமல் இருந்துள்ளனர்.

இதனை பயன்படுத்தி சகோதரிகள் மேகா, பார்கவா இருவரும் தொடர்ந்து பலரை ஏமாற்றி பணம், நகைகளை மோசடி செய்துள்ளனர். கொச்சி வாலிபர் துணிந்து போலீசில் புகார் செய்ததால் இருவரும் சிக்கி கொண்டனர்.

கொச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சகோதரிகள் மேகா, பார்கவா இருவருக்கும் 3 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

மேலும் ரூ.9.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதோடு மோசடி செய்த பணத்தை சகோதரிகள் இருவரும் புகார்தாரருக்கு திருப்பி வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags:    

Similar News