இந்தியா
அமித் ஷா

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: பாராளுமன்றத்தில் அமித் ஷா விளக்கமளிக்கிறார்

Published On 2021-12-06 05:37 GMT   |   Update On 2021-12-06 05:37 GMT
நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
நாகாலாந்து மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப்புடையினர் (பி.எஸ்.எஃப்) துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஒரு வீரரும் உயிரிழந்தார். அதன்பின் நடைபெற்ற வன்முறையில் ஒரு நபர் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவான விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் இன்று எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  நாகாலாந்தில் அப்பாவி மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விவாதம் நடத்த கோரி, மாநிலங்களவையில் ராஷ்டிரிய ஜனதாதள் எம்.பி. மனோஜ் ஷா நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இதேபோல் விதி எண் 167 மற்றும் 168 கீழ் நாகாலாந்து விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர்ராய் நோட்டீஸ் அளித்துள்ளார்.

இதேபோல் பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மனிஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஆகியோர் நாகாலாந்து பிரச்சனை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதனிடையே நாகலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்திற்கு இன்று செல்லும் மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் குழு விசாரணை நடத்துகிறது.
Tags:    

Similar News