இந்தியா
போராட்டம்

இடஒதுக்கீட்டில் முறைகேடு: யோகி ஆதித்யநாத் வீட்டை நோக்கி சென்றவர்கள் மீது தடியடி

Published On 2021-12-05 05:29 GMT   |   Update On 2021-12-05 05:29 GMT
உ.பி.யில் உதவி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் இட ஒதுக்கீட்டை மறுத்த முதல்வர், தற்போது அவர்களை அடிக்க உத்தரவிட்டுள்ளார் என சமாஜ்வாடி கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 69,000 உதவிஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமனம் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், போராட்டக்காரர்கள் நேற்று மத்திய லக்னோவில் உள்ள முக்கிய சந்திப்பில் இருந்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்தை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். அப்போது, போராட்டக்காரர்களை கலைந்து செல்ல போலீசார் வற்புறுத்தினர்.

அவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவிக்க, போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் தலைதெறிக்க ஓடினர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சமாஜ்வாடி கட்சியினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதில், போலீசார் போராட்டக்காரர்களை துரத்தி அடித்து விரட்டுவதுபோல் பதிவாகி உள்ளது.

மேலும் அந்த வீடியோவுடன், "69,000 உதவி ஆசிரியகளை நியமனம் செய்வதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்  இட ஒதுக்கீட்டை மறுத்த முதல்வர் தற்போது அவர்களை அடிக்க உத்தரவிட்டுள்ளார்.

அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய மிருகத்தனமான லத்திச் சார்ஜ் செயல் கண்டிக்கத்தக்கது" என்று  பதிவிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்.. துபாயில் காதல்... கோவையில் மோதல்... காதலன் முகத்தில் திராவகம் வீசிய பெண்
Tags:    

Similar News