இந்தியா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா அழைப்பு: நல்லவிதமாக நடந்தால் போராட்டம் வாபஸ்- விவசாயிகள்

Published On 2021-12-05 02:47 GMT   |   Update On 2021-12-05 02:47 GMT
மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் உயர்மட்டக்குழு இடையே நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களால், விவசாயத் துறைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்த விவசாயிகள் அந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என கடந்த ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைதொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. இந்த சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இருப்பினும், விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்பட நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என்று விவசாயிகள் அறிவித்தனர்.



மேலும், போராட்டத்தில் ஈடுப்டட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக, மத்திர அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு விவசாயிகள் சங்கத்தினர் கடிதம் எழுதினர். இதற்கு செவி சாய்த்த மத்திய அரசு விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசி தீர்க்க, 5 விவசாயிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேளாண் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக விவசாயிகள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் யுத்வீர் சிங் கூறியதாவது:-

மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலவி வரும் போராட்டத்திற்கு தீர்வு காண்பதில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார். உள்துறை அமைச்சர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவை இப்போது உருவாக்கியுள்ளோம்.

மத்திய அரசு மற்றும் குழு இடையேயான சந்திப்பு வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறகிறது. அதில், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். இதன் முடிவில் சமரசம் காணப்பட்டால், போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் எல்லையில் இருந்து திரும்பிச் செல்ல வாய்ப்புள்ளது," என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. மக்களுக்கு வலி மற்றும் இழப்பு என வரும்போது மத்திய அரசு தூங்குகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Tags:    

Similar News