இந்தியா
மும்பை விமான நிலையத்தில் குவிந்துள்ள பயணிகள்

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று -மொத்த பாதிப்பு 4 ஆக உயர்வு

Published On 2021-12-04 14:47 GMT   |   Update On 2021-12-04 14:47 GMT
தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 40 நாடுகளில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணி மற்றும் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஆகிய 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி ஆனது. இதேபோல் குஜராத் மாநிலம் ஜாம்நகரி ஒருவருக்கு இன்று ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை அருகே உள்ள கல்யாண்-டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த அந்த நபர், தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் இருந்து துபாய், டெல்லி வழியாக மும்பை வந்துள்ளார். அவர் தடுப்பூசி எதுவும் செலுத்தவில்லை. அவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த 35 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை கூறி உள்ளது.

இதேபோல், பாதிக்கப்பட்ட நபருடன் டெல்லி-மும்பை விமானத்தில் பயணித்த 25 பேருக்கும் பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. மேலும், தொடர்புடைய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
Tags:    

Similar News