இந்தியா
நடிகை ஸ்வரா பாஸ்கர் - மம்தா பானர்ஜி

நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது...? நடிகையிடம் கருத்து கேட்ட மம்தா

Update: 2021-12-02 12:58 GMT
மேற்கு வங்க முதல்வருடன் பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் கலந்துரையாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புதுடெல்லி:

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மூன்று நாட்கள் பயணமாக மும்பை சென்றுள்ளார். மும்பையில் முகாமிட்டிருக்கும் அவர், மராட்டிய அரசியல் கட்சி தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று சந்தித்து பேசினார். 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக  ஒருங்கிணைந்த மாற்றுக் கட்சியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். நேற்று சிவில் சமூகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திரையுலகினரைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக மற்றும் கலாச்சார அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சமீபத்திய அரசியல் முரண்கள் குறித்து மம்தாவுடன் கலந்துரையாடினர். 

இந்த நிகழ்ச்சியில், பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரும் கலந்து கொண்டார். சமூகத்தில் நிகழும் அவலங்களையும், ஆங்காங்கே நடக்கும் அரசு 
வன்முறைகளையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி குறிப்பிட்டு வருபவர் இவர். நேற்றைய நிகழ்ச்சியில், நாட்டில் சட்ட விரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் - (UAPA) தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். 

"வணங்க மறுத்த பிறகும், கடவுள் போல் செயல்படும் அரசு நிர்வாகம் UAPA வழக்குகளை தட்சணையாக அள்ளிக் கொடுத்து வருகிறது" என்று தெரிவித்தார். 

மேலும், கதைகள் பாரம்பரியம் கொண்ட ஒரு நாட்டில், தற்போது கதை சொல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்ப்புக் குரலை பதிவு செய்ய கலைஞன் தன் வாழ்வாதாரத்தை பணயம் வைக்க வேண்டியுள்ளது. 

அடையாளம் தெரியாத, முகம் தெரியாத கும்பல் வன்முறையை, சாதாராண  மக்களும் சந்தித்து வருகின்றனர். காவல் துறையும், அரசு நிர்வாகமும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதன் மூலம், கும்பல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன" என்று தெரிவித்தார். 

ஸ்வரா பாஸ்கரின் மனக்குமுறல்களைக் கேட்டு வியப்படைந்த மம்தா பானர்ஜி, " எதற்கும் அஞ்சாத, அநீதியை கண்டு பொங்கி எழும் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது" என்று வினவினார்.

இதற்கு, அரங்கத்தில் இருந்த அனைவரும் பலத்த கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்த, வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 
இதையும் படியுங்கள்...
Tags:    

Similar News