இந்தியா
காற்று மாசுபாடு

காற்று மாசு பாதிப்பு- டெல்லியில் காலவரம்பின்றி பள்ளிகள் மூடப்படும் என அறிவிப்பு

Published On 2021-12-02 08:44 GMT   |   Update On 2021-12-02 08:44 GMT
காற்று மாசு தொடர்பான உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வியால் டெல்லி அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு காற்று மாசின் அளவு அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. காற்று மாசில் இருந்து காத்துக் கொள்ளும் வகையில்  இளைஞர்களுக்கு வீட்டில் இருந்து வேலைபார்க்கும் நடைமுறையை அமல்படுத்தி உள்ள நிலையில் குழந்தைகளை மட்டும் பள்ளிகளுக்கு செல்லுமாறு ஏன் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.



காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக புதிய திட்டத்தை அமல்படுத்த 24 மணிநேரம் கெடுவிதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசும், டெல்லி அரசும் நடவடிக்கை எடுக்க தவறினால் உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து டெல்லியில் உள்ள அனைத்துப்பள்ளிகளும் நாளை முதல் காலவரம்பின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ள யூனியன் பிரதேச சுற்றுச்சூழல்துறை அமைச்சர்  கோபால்ராய், காற்று மாசு காரணமாக அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

Tags:    

Similar News