இந்தியா
மம்தா பானர்ஜி, ஷாருக்கான்

ஜனநாயகமற்ற பாஜகவால் ஷாருக்கான் பாதிக்கப்பட்டார்: மம்தா பானர்ஜி

Published On 2021-12-02 03:34 GMT   |   Update On 2021-12-02 03:34 GMT
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் மும்பை சொகுசு கப்பலில் நடந்த சோதனையின்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.
மும்பை

மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 3 நாள் சுற்றுப்பயணமாக மும்பை வந்துள்ளார். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று அவர் சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், நடிகர்கள் சத்ருகன் சின்ஹா, ரிச்சா சந்தா மற்றும் ஸ்வாரா பாஸ்கர், நகைச்சுவை நடிகர் முனாபர் பாருக்கி மற்றும் சுதந்திர குல்கர்னி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

இந்தியா மனித சக்தியை தான் விரும்புகிறது. உடல் பலத்தை அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் சிறப்பாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பா.ஜனதாவின் கொடூரமான, ஜனநாயகமற்ற மற்றும் நெறிமுறையற்ற மோசமான அணுகுமுறையை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

எனக்கு தெரிந்து மகேஷ் பட் இவர்களால் பாதிக்கப்பட்டார். இந்தி நடிகர் ஷாருக்கான் பாதிக்கப்பட்டார். மேலும் பலர் கஷ்டங்களை அனுபவித்தனர். சிலர் வாயை திறக்கிறார்கள், சிலரால் முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் மும்பை சொகுசு கப்பலில் நடந்த சோதனையின்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார். சுமார் ஒருமாதம் சிறைவாசத்திற்கு பின்பு அவருக்கு ஐகோர்ட்டால் ஜாமீன் வழங்கப்பட்டது.

நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் ஆவார். அவருக்கும், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே நல்ல உறவு உள்ளதாக அறியப்படுகிறது.

Tags:    

Similar News